search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள் கூட்டம்
    X
    யானைகள் கூட்டம்

    ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்

    விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சான மாவு சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளை சுற்றிய வனப்பகுதிகளில் 200 யானைகள் உள்ளன. ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலும் சுமார் 30 யானைகள் கூட்டம் உள்ளன.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வருகின்றன. இந்த யானைகள் கூட்டம் சுமார் 4 மாதங்கள் வரை முகாமிட்டு அருகே உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை தின்று வருகின்றன. இதில் ராகி யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆகும். ராகியில் பால் சூல் தருணத்தில் அதன் வாசனையை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே யானைகள் நுகர்ந்து இடத்தை கண்டுபிடித்து விடும். அந்த அளவுக்கு யானையின் மோப்ப சக்தி இருக்கும்.

    மேலும் தினமும் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் யானைகள் நடக்கும். தான் வந்த பாதையை சரியாக நினைவில் வைத்து கொள்ளும் அபார திறமை பெற்றவையாகும்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லாததால் அடிக்கடி கிராமங்களை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட யானைகள் , தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் கூட்டம் தற்போது அங்குமிங்கும் வனப்பகுதியிலேயே சுற்றி வருகின்றன. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு, ஊடேதுர்க்கம், அஞ்செட்டி ஆகிய வனப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் புகுந்து விடுகின்றன. பின்னர் அங்கு விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வனத்துறையினர் இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி யானைகள் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் யானைகளால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×