search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து தொழிலாளர்கள்
    X
    போக்குவரத்து தொழிலாளர்கள்

    புதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி

    புதுவையில் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் சார்பு நிறுவனமான அரசு போக்குவரத்துக்கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகர், கிராமப்புற பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    புதுவையிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூரு, நாகர்கோவில், குமுளி, கடலூர், விழுப்புரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அரசு போக்குவரத்துக்கழக பஸ் வழித்தடங்களை தனியார் மயமாக்குவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்தி தனியாருக்கு வழித்தடங்கள் வழங்கப்படாது என உறுதியளித்தார். இதனையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனிடையே போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த மாதம் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுவையில் ஓடும் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. வெளியூர் களுக்கு நிரந்தர தொழிலாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.

    ஒரு சில நாட்கள் நடந்த போராட்டத்துக்கு பிறகு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். பஸ்கள் இயங்க தொடங்கியது. ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்தனர்.

    நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர். நேற்று சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அங்கு வாயிலை அடைத்து அமர்ந்தனர். இதனால் பஸ்கள் வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. போராட்டத்தில் நிரந்தர ஊழியர்கள் பங்கேற்காவிட்டாலும் பஸ்களை வெளியே கொண்டுசெல்ல முடியாததால் பணிக்கு வந்த ஊழியர்கள் அமைதியாக நின்றிருந்தனர்.

    இதனால் புதுவையில் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. பயணிகள் அவதிக்குள்ளாகினர். புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    Next Story
    ×