search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    லாரி உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    பாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலையில் 4 வாலிபர்கள் கைது

    பாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பாகூர்:

    கடலூர் மாவட்டம் சாவடி அய்யாநகரை சேர்ந்தவர் மனோஜ்நந்தன் (வயது 30). லாரி உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி, தனது நண்பர்கள் கார்த்தி, பிரதாப் ஆகியோருடன் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் மதுக்கடைக்கு பின்புறம் உள்ள காலிமனையில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது அவர்களுக்கு அருகில் ஒரு கும்பல் மது அருந்திய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்தனர். இதனை மனோஜ் நந்தன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டனர். ரகளையில் ஈடுபட்ட கும்பலுக்கும், மனோஜ்நந்தன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் மனோஜ்நந்தன், கார்த்தி, பிரதாப் ஆகியோரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மனோஜ்நந்தன் உயிரிழந்தார். காயமடைந்த கார்த்தி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடலூர் கே.என்.பேட்டை சத்தியசாய் நகர் ராஜ் என்கிற ராஜேஷ் (24) தலைமையிலான கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான திருவந்திபுரம் சாலக்கரை ரஞ்சித்குமார் (22), அரிசி பெரியாங்குப்பம் வினித்குமார் (23), கே.என்.பேட்டை தன்ராஜ் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது தமிழகத்தில் கொலை, அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×