என் மலர்
செய்திகள்

துறைமுகத்தில் குவிந்து கிடந்த மரக்கழிவுகள் தீப்பிடித்து எரிந்த போது எடுத்தபடம்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடந்த மரக்கழிவுகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன்பிடி துறைமுகம் பகுதியில் பழுதான விசை படகு, பைபர் படகுகளை சரிபார்க்கும் இடம் உள்ளது. அத்துடன் புதிய விசைபடகு கட்டுமான தளமும் உள்ளது. இங்கு உடைந்த படகுகளின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று அங்கு குவிந்து கிடந்த மரக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடற்கரையோரம் என்பதால் காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது.
தீ விபத்தை அறிந்த வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் அங்கு நிறுத்தி இருந்த ஒரு பைபர் படகு முற்றிலும் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டதால் அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த புதிய விசைப்படகுகள் தீ விபத்தில் சிக்காமல் தப்பின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story