search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம்

    புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடந்த 4½ ஆண்டாக அதிகாரம் தொடர்பான மோதல் இருந்து வருகிறது.

    யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கே அதிகாரம் என்பதால் அரசின் அன்றாட செயல் பாடுகளில் கவர்னர் கிரண்பேடி தலையிட்டு வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அமைச்சரவை எடுக்கும் முடிவுகள், சட்டமன்ற அறிவிப்புகள், கொள்கை முடிவுகளில் கூட கவர்னர் கிரண்பேடி தலையிட்டு உள்துறைக்கு கோப்புகளை அனுப்புகிறார். கிரண்பேடி தடையால் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கருப்புச்சட்டையுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு நாராயண சாமி போராட்டம் நடத்தினார். 6 நாட்கள் நீடித்த இந்த போராட்டம் கவர்னர், அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகள்கூட நிறைவேறவில்லை.

    இலவச அரிசி, துணி, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு, தனியார் மருத்துவக்கல்லூரியில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு, பொங்கல் பரிசு என அரசு பரிந்துரை செய்த பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் திட்டங்கள் நிறைவேறாமல் போனதற்கு மாநில அரசு காரணமில்லை. கவர்னர்தான் காரணம் என மக்களுக்கு தெளிவுபடுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

    இதனால் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மீண்டும் கவர்னர் மாளிகை முன்பு இன்று முதல் (வெள்ளிக்கிழமை)தொடர் போராட்டம் தொடங்க முடிவு செய்தனர். கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். தடையை மீறி போராட்டம் நடத்தினால் தொற்றுநோய் பரப்புதல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரித்தார்.

    காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை அழைத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் நகர பகுதியில் மறைமலை அடிகள் சாலையில் அண்ணா சிலையிலிருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையேற்று மறைமலை அடிகள் சாலையில் போராட்ட பந்தல் நேற்று இரவு அமைக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது.

    போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    காங்கிரஸ் கூட்டணி போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக கேரளா, தெலுங்கானா விலிருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய அதிரடிப்படை படை வீரர்கள் புதுவைக்கு வந்தனர். நேற்று முதல் கவர்னர் மாளிகை, சட்டமன்றம், தலைமை செயலகம், முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு, மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கவர்னர் மாளிகை, சட்டமன்ற வளாகத்தை சுற்றிலும் தடுப்புகட்டைகள், பேரிகார்டுகள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கவர்னர் மாளிகையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டது.

    மேலும் சாதாரண உடையில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். காங்கிரஸ் போராட்டத்தால் புதுவையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.


    Next Story
    ×