என் மலர்
செய்திகள்

நீர் பனியால் பூச்செடிகள் கருகாமல் இருக்க வலை போடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
நீர் பனியால் பூச்செடிகள் கருகாமல் இருக்க முன்னேற்பாடு
நீர் பனியால் பூச்செடிகள் கருகாமல் இருக்க ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்காவில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வந்தது. ஊட்டியில் கடந்த வாரம் திடீரென உறைபனி தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் நீர் பனி மற்றும் உறைபனி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் நீர் பனி தாக்கம் உள்ளது. இதனால் பசுமையான புல்வெளிகளில் நீர் துளிகள் இருப்பதை காண முடிகிறது. வருகிற நாட்களில் உறைபனி தாக்கம் அதிகரிக்கக்கூடும். இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறி செடிகளுக்கு காலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இதன் மூலம் பனி தாக்கத்தால் செடிகள் கருகுவதை தடுக்க முடியும். ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை பூங்காவில் நீர் பனி அதிகளவில் இருக்கிறது. அதன் காரணமாக மலர் மற்றும் அலங்கார செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க பணியாளர்கள் பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.
மேலும் இரவு நேரங்களில் நீர் பனி தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க செடிகள் மீது நிழல் வலைகள் போடப்பட்டு உள்ளது. தேயிலை பூங்காவில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள கோடை சீசனையொட்டி பல்வேறு ரகங்களை சேர்ந்த மலர் நாற்றுகள் நர்சரியில் நடவு செய்யப்பட்டு இருக்கிறது.
நீர் பனி தாக்கத்தால் மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்கவும், கருகுவதை தடுக்கவும் சுற்றிலும் நிழல் வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பகலில் வெயில் அதிகமாகும்போது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபாதை ஓரங்களில் உள்ள அலங்கார செடிகள் மீது நிழலுக்காக கோத்தாரி மிலார் செடிகள் போடப்பட்டு இருக்கிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகளை கொண்டு அமைக்கப்பட்ட அலங்காரம், இந்திய வரைபடம், தமிழ்நாடு எம்பலம் உள்ளிட்ட இடங்கள் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கொண்டு மூடப்படுகிறது. மேலும் நீர் பனியால் பூஞ்செடிகள் கருகாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Next Story






