search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை படத்தில் காணலாம்.
    X
    பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை படத்தில் காணலாம்.

    பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.7¾ லட்சமா?- திருப்பூர் மாநகராட்சி விளக்கம்

    திருப்பூரில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.7¾ லட்சமா? என சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 1-வது வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குணசேகரன் எம்.எல்.ஏ. கடந்த 7-ந் தேதி இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து தொடங்கி வைத்தார். இந்த தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து குணசேகரன் எம்.எல்.ஏ. தனது முகநூல் பதிவின் மூலமாக அதற்கான விளக்கத்தையும் அளித்தார். மேலும் இந்த பிரச்சினை குறித்து எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்களில் குடிநீர் தொட்டியின் புகைப்படத்தையும், அதிலுள்ள திட்ட மதிப்பீடு தொகை, திறந்து வைத்த எனது பெயரையும் குறிப்பிட்டு தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து உடனடியாக இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து அந்த திட்டத்தின் திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்குமாறு கேட்டேன். அதன்படி மாநகராட்சி சார்பில் திட்ட மதிப்பீட்டை அனுப்பி வைத்தனர். குடிநீர் தொட்டிக்கு மட்டும் இந்தத் தொகை என தகவல் தவறாக பரப்பி விட்டனர்.

    அந்த இடத்தில் இருந்த கைப்பம்பை அகற்றி ஆழப்படுத்தி நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தி பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைத்து அங்கிருந்து வீதிகளுக்கு பகிர்மான குழாய்கள் போட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகளுக்கான மொத்த திட்ட மதிப்பீடு தான் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு தொகை குறித்த விவரங்களை அறிவிப்பு பலகையாக சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி அருகே மக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்று அதிகாரியிடம் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் கேட்டபோது “ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 1-வது வீதியில் ஏற்கனவே உள்ள கைப்பம்பை அகற்றி மின் மோட்டார் பொருத்தி ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 1-வது வீதி மற்றும் முத்து விநாயகர் கோவில் வீதிகளில் பகிர்மான குழாய் அமைத்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மோட்டார் அறைக்கு ரூ.67 ஆயிரத்து 500, கைப்பம்பை அகற்றி ஆழப்படுத்தியதற்கு ரூ.41 ஆயிரத்து 800, மின் மோட்டாருக்கு ரூ.71 ஆயிரத்து 900, போர்வெல் குழாய்க்கு ரூ.96 ஆயிரம், 740 மீட்டர் பகிர்மான குழாய்கள் அமைக்க ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 500, மின்சாதனங்கள் ரூ.80 ஆயிரம், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி ரூ.26 ஆயிரத்து 100 உள்பட மொத்தம் ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்து 600, ஜி.எஸ்.டி., மின்வாரியத்துக்கு கட்டணம் செலுத்தியது உள்ளிட்டவை என மொத்தம் ரூ.7 லட்சத்து 69 ஆயிரத்து 582 ஆகும். இந்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி அருகே பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை“ என்றார்.
    Next Story
    ×