என் மலர்

  செய்திகள்

  டிடிவி தினகரன்
  X
  டிடிவி தினகரன்

  சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தலையெடுக்க விடாமல் செய்யும் ஆற்றலுடன் பணியாற்றுவோம்- டிடிவி தினகரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தலையெடுக்க விடாமல் செய்யும் ஆற்றலுடன் பணியாற்றுவோம் என அறிக்கையில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
  சென்னை:

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  எந்நாளும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருந்து நம்மை வழிநடத்தும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு...

  பெருந்தொற்றான கொரோனா நம்மை முடக்கிப்போட்ட நிலை தற்போது சற்றே மாறி உலகம் மெதுவாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உலகின் ஆலோசனைகளை இன்னும் சில காலத்திற்கு நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

  இந்நிலையில் நம்முடைய கொள்கைத் தலைமகன், அறிவுலக ஆசான், தமிழ்த் தாயின் மூத்தப் பிள்ளை, தந்தை பெரியாரின் முதல் மாணாக்கர் பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த தினம் செப்டம்பர் 15-ந்தேதி வருகிறது.

  “தமிழ் மக்களுடைய தனித்தன்மைகளை கட்டிக் காத்து, அதே நேரத்தில் தேசிய இலக்குகளுக்கு வலிமை சேர்க்கிற வகையில் ஒருமைப்பாட்டுக்காக உழைப்பதும், பேத உணர்ச்சிகள், பிரிவினை எண்ணங்கள் வளர இடம் தராமல் பார்த்துக் கொள்வதுமே பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டிக்காத்த குறிக்கோள்கள்” என்று அண்ணாவின் இதயக் கனியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன இந்த வைர வரிகளை, எந்நாளும் கடைபிடிக்கிற இயக்கமாக நம்முடைய கழகம் திகழ்கிறது.

  இப்படி பெருமகன் அண்ணாவின் கொள்கைகளைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் உயர்த்தி பிடித்து புதிய வெற்றிகளுக்கு அடித்தளமிடுவோம். இதயதெய்வம் அம்மா கட்டிக் காத்த தமிழ்நாட்டு பெருமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் மீட்டெடுத்திட அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

  அம்மா இல்லாத துணிச்சலில், ‘இன்னும் 8 மாதங்களில் நாங்களே ஆளுங்கட்சி’ என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் தீயசக்தியான தி.மு.க.வை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விடாமல் செய்கிற ஆற்றல் அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நமக்குத் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நேரம் நெருங்குகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தல் களத்தில் அதை நிச்சயம் நாம் செய்து காட்டி புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான ஆட்சியைத் தமிழகத்தில் அமைப்பதற்கு சபதம் ஏற்போம்.

  பதுங்குவதாக நம்மை பார்த்து இன்று பழிப்பவர்கள் எல்லாம், அம்மா வளர்த்த சிங்கக்குட்டிகளாக நாம் களத்தில் சீறிப்பாய்ந்து பணியாற்றும்போது காணாமல் போய்விடுவார்கள். அந்தளவுக்கு மக்களின் அன்பை, ஆதரவை வென்றெடுப்பதற்கான அடிப்படை உத்திகளுடனும், திட்டங்களுடனும் நாம் தயாராகி இருக்கிறோம்.

  அவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான உறுதி ஏற்கும் தினமாக அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை அமைத்துக்கொள்வோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×