search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே நெடியம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளத்தை காணலாம்
    X
    பள்ளிப்பட்டு அருகே நெடியம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளத்தை காணலாம்

    கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அணை திறக்கப்பட்டதன் எதிரொலியாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அம்மம் பள்ளியில் உள்ள அணை தற்போது தண்ணீரால் நிரம்பி உள்ளது. வழக்கமாக அணை நிரம்பினால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படுவது வழக்கம். இந்த தண்ணீர் நகரி, பள்ளிப்பட்டு, நல்லாட்டூர் வழியாக பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும்.

    இந்தநிலையில் அம்மம் பள்ளி அணையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இது பற்றி ஆந்திர அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுரக்காய் பேட்டையில் உள்ள தரைப்பாலம், நெடியம் தரைப்பாலம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகவல் வருவாய்த்துறை, போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
    Next Story
    ×