என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி சட்டசபை
    X
    புதுச்சேரி சட்டசபை

    புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டம் நாளை தொடங்குகிறது

    புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதையொட்டி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை ஆலோசனை நடத்தியது.
    புதுச்சேரி:

    அரசு செலவினங்களுக்காக கடந்த மார்ச் மாதம் 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அனுமதி காலம் முடிந்ததையடுத்து முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் சட்டசபை வளாகம் 4-மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கவர்னர் உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    புதுவை மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை மனதில் வைத்து முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே முடங்கியுள்ள நலத்திட்டங்கள், பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்காதது போன்ற பிரச்சினைகளை எழுப்பப்படும் என்று தெரிகிறது.

    பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதையொட்டி சட்டசபை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×