search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் விரிவாக்க மையம் பூட்டிக்கிடந்ததை படத்தில் காணலாம்.
    X
    வேளாண் விரிவாக்க மையம் பூட்டிக்கிடந்ததை படத்தில் காணலாம்.

    மானிய விலையில் நெல், பயறு வகை விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை- விவசாயிகள் கோரிக்கை

    மானிய விலையில் நெல், பயறு வகை விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் விரிவாக்க மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்து திருவரங்குளம், வேப்பங்குடி, தேத்தாம்பட்டி, காயாம்பட்டி, கல்லுப்பள்ளம், மாங்கனாம்பட்டி, மாஞ்சா விடுதி, மழவராயன் பட்டி, வம்பன் நாலு ரோடு, கொத்தக்கோட்டை, தெட்சிணாபுரம், வல்லத்திராகோட்டை, பூவரசகுடி, கைக்குறிச்சி, திருக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் விதை, உளுந்து, தட்டைப்பயிறு, கடலை உள்ளிட்ட பயறு வகை விதைகளை மானிய விலையில் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் காரணமாக விரிவாக்க மைய கட்டிடம் பழுதடைந்தது. இதன் காரணமாக இந்த கட்டிடத்தை இங்கிருந்து வம்பன் நாலு ரோட்டுக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்ததை அறிந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து, வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை சீரமைத்து இங்கு மீண்டும் செயல்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை கட்டிடத்தை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால், இதனை பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்ள நெல், கடலை உள்ளிட்ட பயறு வகை விதைகளை மானிய விலையில் இந்த மையத்தில் இருந்து பெற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வம்பனில் நாலுரோடு பகுதியில் செயல்படும் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் ரக விதைகள் மற்றும் கடலை, உளுந்து, பாசிப்பருப்பு, தட்டைப்பயறு போன்ற பயறு வகை விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மானியம் வழங்காமல் முழு விலையிலேயே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படும் ஆலங்குடி, வடகாடு பகுதிகளில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் பெரும்பாலும் திறக்கப்படுவதே இல்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும், கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. புயல் பாதிப்புக்கு பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னை மரக்கன்றுகளில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய போதிலும் அந்த தொகை விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை என்பதே இப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டு ஆகும். ஆகவே, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் நெல் மற்றும் அனைத்து பயறு வகை விதைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×