search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
    X
    கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

    கொரோனா சிகிச்சைக்காக 240 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் இணைப்பு- கலெக்டர் தகவல்

    அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 240 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் இணைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படவுள்ள 310 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் 240 படுக்கைகளுக்கும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்பு குழாய் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    செந்துறை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுக்கும், உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுக்கும் குழாய் மூலம் ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அவசர உதவிக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் 100 ஆக்சிஜன் உருளைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அரியலூர் அரசு மருத்துவமனையில் 45 ஆக்ஸிஜன் உருளைகளை கொண்டு படுக்கைகளுக்கு அருகில் வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.

    அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பதற்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையிலிருந்து நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் ஒருவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையத்திற்கு மாற்று பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், கூடுதல் ஆய்வக நிபுணர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயினுலாபதீன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, டாக்டர் ரமேஷ், கோட்டாட்சியர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட தகவலியல் அலுவலர் ஜான்பிரிட்டோ மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×