search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரித உணவகம் நடத்தும் புதுவை மாணவர்கள்
    X
    துரித உணவகம் நடத்தும் புதுவை மாணவர்கள்

    துரித உணவகம் நடத்தும் புதுவை மாணவர்கள்

    புதுச்சேரியில் மாணவர்கள் நடத்தும் துரித உணவகத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் உணவு வாங்கிச் செல்கிறார்கள்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பலர் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் 5 பேர் ஒன்று சேர்ந்து பாஸ்ட்புட் கடை (துரித உணவகம்) ஒன்றை உப்பளம் துறைமுக வாயிலில் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கி உள்ளனர்.

    பழைய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி அதன் பின்னால் அடுப்பு தயார் செய்து கோழி மற்றும் இறாலை கொண்டு விதவிதமான உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து சுடச்சுட வழங்கி வருகின்றனர். மாணவர்களே நடத்தும் இந்த கடை ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நாட்களே ஆனபோதிலும் மக்கள் அதிக அளவில் வந்து உணவு வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

    இதுதொடர்பாக மாணவர் அஜித் கூறியதாவது:-

    நான் எனது நண்பர்களான வெற்றி, ஆகாஷ், ஹரிஷ், முகேஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்த தொழிலை நடத்தி வருகிறோம். நாங்கள் திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள். தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டோம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தொழில் செய்வதில் ஆர்வமாக இருந்தோம். தற்போது விடுமுறை காலம் என்பதால் அதை நடைமுறைப்படுத்த முடிவு செய்தோம். இதன்படி ரூ.ஒரு லட்சம் செலவு செய்து நண்பர்கள் உதவியுடன் இந்த தொழிலை தொடங்கி உள்ளோம். தொழில் தொடங்கி சில நாட்கள் தான் ஆகிறது. இருந்த போதிலும் மக்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள்.

    பிளஸ்-2 தேர்ச்சி முடிவுகள் வந்ததும் நாங்கள் கல்லூரியில் சேர திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகும் இதை கைவிட மாட்டோம். தொடர்ந்து மாலை நேரங்களில் வியாபாரத்தை கவனிப்போம். எங்கள் பெற்றோருக்கு சுமை கொடுக்காமல் படிப்புக்குத் தேவையான பணத்தை இதன் மூலமே சம்பாதிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×