search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவமணி
    X
    தவமணி

    கந்தர்வகோட்டை அருகே தொழில் அதிபர் கொலையில் உறவினர் உள்பட 3 பேர் கைது

    ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் தவமணி(வயது 50). இவருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், ரோகினி, வினோதினி என்ற 2 மகள்களும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர்.

    தொழில் அதிபரான தவமணி, சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள நகை கடைகள், பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு உள் அலங்கார வேலைகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தார். இவருக்கு சென்னை, திருச்சி, கறம்பக்குடி ஆகிய ஊர்களில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளும், வெள்ளாளவிடுதியில் விவசாய நிலங்களும் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி இரவு தவமணி, வெள்ளாளவிடுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். ஆனால் மறுநாள் காலை வரை அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்திரா, விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது அங்கு தவமணியின் இருசக்கர வாகனம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த பகுதி முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா பல இடங்களில் தேடியும் தவமணி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தவமணியை காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது.

    மேலும், தவமணியின் மனைவி சந்திராவுக்கு மர்ம நபர்கள் போன் செய்து, தவமணியை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என்றும், கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு கோபால்சந்திரன் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தவமணியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளாளவிடுதியை சேர்ந்த தவமணியின் உறவினர் அழகர் மகன் கமல் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், பணத்திற்காக தவமணியை கடத்தியதாகவும், ஆனால் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காததால், சுமார் 12 நாட்களுக்கு முன்பு அவரை கொலை செய்து கல்லணை தோகூர் பகுதியில் உள்ள ஆற்றில் உடலை வீசியதும், தெரியவந்தது. இதையடுத்து கமல் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தவமணியின் உடல் வீசப்பட்ட ஆற்றுப்பகுதியில், உடலை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×