search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 மதுக்கடைகள் மட்டும் திறப்பு

    சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில் கடந்த 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது வாங்க அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியது. இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது, ஆன்-லைன் மூலம் மதுபானங்கள் விற்கலாம் என கடந்த 8-ந்தேதி உத்தரவிட்டது.

    இதனால் திறக்கப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

    அப்போது மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப் பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் இயங்காது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. திருவள்ளூர், சென்னை மாவட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.

    சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 மதுக்கடைகள் உள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் -3, உத்திரமேரூரில்-3 என மொத்தம் 16 மதுக்கடைகள் மட்டும் திறந்திருந்தது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 மதுக்கடைகள் உள்ளன. இதில் மதுராந்தகம் தாலுக்கா பகுதியில் மதுராந்தகம் டவுன், மாம்பாக்கம், அவுலிமேடு, வேடந்தாங்கல், அச்சரப்பாக்கம், பின்னம் பூண்டி, பெரும்பேர் கண்டிகை உள்ளிட்ட இடங்களில் 9 மதுக்கடைகளும், செய்யூர் தாலுக்காவில் சோத்துப்பாக்கம், செய்யூர் பகுதியில் 2 கடைகளும் என மொத்தம் மாவட்டத்தில் 11 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

    குறைந்த அளவிலான மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டதால் டோக்கன்கள் வாங்க அதிகாலையிலேயே மதுக்கடைகள் முன்பு குடிமகன்கள் குவியத் தொடங்கினர்.

    ஏற்கனவே கடந்த வாரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கடைகள் முன்பு, தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மதுப்பிரியர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்.

    சில இடங்களில் குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்தபடி நின்றனர். சனிக்கிழமையான இன்று கருநீல நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டது.

    ஆதார் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் காண்பிக்க தேவை இல்லை. மதுக்கடைகள் முன்பு பைகளுடன் மதுப்பிரியர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. மதுக்கடைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    குறைந்த எண்ணிக்கையில் மதுக்கடைகள் திறந்து இருந்ததால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மதுப்பிரியர்கள் வாகனங்களில் டாஸ்மாக் கடைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அனைத்து மதுக்கடைகள் முன்பும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து குடிமகன்கள் வருவதை தடுக்கவும் மாவட்ட எல்லைகளிலும், மதுக்கடைகள் உள்ள பகுதிகளிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×