search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது எடுத்தபடம்.
    X
    கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது எடுத்தபடம்.

    கோவை சாதி ஒழிப்பு மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து தீர்மானம்

    தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசும் நடிகர் ரஜினிகாந்தை கோவையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாடு வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    கோவை:

    கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன் வரவேற்றார்.

    திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தெகலான்பாகவி, தனியரசு எம்.எல்.ஏ., பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன், ஆனைமுத்து, திருமுருகன் காந்தி, தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், ஆதிதமிழர் பேரவை அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    இந்த மாநாட்டில் சாதிக்கு அடித்தளமான மனுதர்மம் எனும் மனுநூல் உள்ளது. எனவே அம்பேத்கர், பெரியார் வழியில் மனுநூல் எரிப்பு போராட்டங்கள் வருகிற மே மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவம் நடைபெறும்.

    நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசுவதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரது பேச்சு தொடரக்கூடாது. அவர் நாவடக்கி பேசவேண்டும் என இம்மாநாடு எச்சரிக்கிறது.

    கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். ஆவண படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருணம் செய்தவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அரசே பாதுகாப்பு இல்லங்களை தொடங்க வேண்டும்.

    கேரள மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை கோவில் அர்ச்சகர்களாக நியமித்ததை போல தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மக்களை பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநாட்டில் கனிகாசெல்வன்- இலக்கியா மற்றும் பிரசாந்த்-ரம்யா ஆகிய ஜோடிகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார்.

    Next Story
    ×