என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியசாமியின் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பில்லி-சூனிய பொருட்கள்.
    X
    பெரியசாமியின் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பில்லி-சூனிய பொருட்கள்.

    பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் வீட்டில் பில்லி சூனியம் வைத்த மர்ம மனிதர்கள்

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் வீட்டில் பில்லி சூனியம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று அண்ணா கிராமம், நல்லூர், கீரப்பாளையம் உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம் கிராமத்தில் 1,300 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெரியசாமி, ராமச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    நேற்று திருமங்கலத்தில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

    இந்த நிலையில் திருமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெரியசாமி நேற்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் சிலர் பெரியசாமியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பெரியசாமியின் படுக்கை அறைக்கு சென்றனர். அங்கு சில பில்லி-சூனிய பொருட்களை வைத்து பூஜை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை பெரியசாமி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    உள்ளே சென்று பார்த்தபோது தனது படுக்கை அறையில் எலுமிச்சம் பழம், தேங்காய், பழம், மை டப்பா, பூக்கள் போன்ற பொருட்கள் இருந்தன. அவற்றை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பெரியசாமி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக யாரோ நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பில்லி-சூனிய பொருட்களை வைத்தது தெரிய வந்தது.

    இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் பெரியசாமி வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்த்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×