search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 பெண்கள் பலியான வைத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சோகத்துடன் நின்றிருப்பதை படத்தில் காணலாம்
    X
    4 பெண்கள் பலியான வைத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சோகத்துடன் நின்றிருப்பதை படத்தில் காணலாம்

    மின்னலுக்கு 4 பெண்கள் பலியானது எப்படி? புதுக்கோட்டை அருகே நெஞ்சை உருக்கும் சோகம்

    புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரில் மின்னலுக்கு 4 பெண்கள் பலியானது எப்படி என்பது குறித்து விரிவான தகவல் வெளியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்ததால் பல இடங்களில் குளங்கள் நிரம்பின.

    கண்மாய்களில் நீர் தேங்கியதால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செம்பாட்டூர் அருகே கீழ முட்டுக்காடு பகுதியில் நேற்று மதியம் வயலில் 50-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நிலக்கடலைகளை பறித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    கீழ முட்டுக்காடு பகுதியிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுக்கு பயந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பாதியில் விட்டுவிட்டு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்திற்குள் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வானத்தில் தோன்றி மறைந்த மின்னல் கூடாரத்தை தாக்கியதில் அதற்குள் நின்றிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதில் வைத்தூரை சேர்ந்த கலைச்செல்வி (வயது 45), லட்சுமியம்மாள் (60) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி (40), விஜயா (45) ஆகியோர் இறந்தனர். வைத்தூர் நடுத்தெருவை சேர்ந்த சரோஜா, நாகலட்சுமி (50), ஜெயலட்சுமி (32), ரங்கம்மாள் (50), தமிழரசி (50), வளர்மதி (40), கோவிந்தம்மாள் (50), ஜெயராணி (40), மலர் (35), மீனாள் (35), பூமணி (40), காவேரி (55), சரோஜா (50), அழகுலட்சுமி, சித்ரா (30), லட்சுமி (50), ராஜம்மாள் (40), கருப்பையா (40) உள்பட 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மின்னல் தாக்கி 4 பெண்கள் பலியான வைத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    வான்வெளியில் ஏற்படும் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். இது வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒளிக் கீற்றாக பிரிந்து மறைகிறது. மேகங்களில் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சார பாய்ச்சலே மின்னலாகிறது.

    பூமி வெப்ப நிலையில் இருந்து குளிர்ச்சியான நிலைக்கு மாறும்போது, மின்னாற்றலில் மாற்றம் ஏற்படும். அப்போது மின்னல் மேலே இருந்து மேக கூட்டங்கள் வழியாக பூமிக்கு வரும். இதனால் காற்றில் துவாரம் ஏற்படும்போது விரிவாக்கம் ஏற்பட்டு இடி உருவாகுகிறது. இடி உருவான 30 விநாடிகளில் மின்னல் பூமிக்கு வரும்.

    இந்த மின்னல் 3 வழியாக பூமியை தாக்குகிறது. நேரடியாக தாக்கும்போது 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இதனால் இடி ஏற்பட்ட 30 விநாடிகளுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும். திறந்த வெளியிலோ, உயரமான மரங்கள் இருக்கும் இடங்களில் நின்றாலோ பாதிப்புகள் ஏற்படும்.

    அதுபோல்தான் நேற்று திறந்தவெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களை மின்னல் தாக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகி, 22 பேர் காயமடைந்துள்ளனர். இடி விழுந்த அடுத்த விநாடி அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான கட்டிட பகுதிக்கு சென்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்.

    உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு 24 பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கிறார்கள். 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை காயம் அடைகின்றனர். மின்னல் தாக்கினால் பெரும்பாலும் இதயம், நரம்புகளை அதிகம் செயலிழக்க செய்து விடும். மின்னல் தாக்கி காயம் அடைந்தவர்கள் அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம்.

    எனவே இடி, மின்னல் தாக்கும்போது திறந்தவெளி, மரங்களுக்கு கீழ் நிற்பது போன்றவற்றை தவிர்த்து கட்டிட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×