search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    வேலூரில் ரூ.3 லட்சம் கேட்டு மாணவர் கடத்தல் - சக மாணவர்கள் 3 பேரிடம் விசாரணை

    வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.3 லட்சம் கேட்டு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் கென்னடி வேலூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மகன் கோகுல் (வயது 18). காட்பாடி கிளித்தான் பட்டறையில் உள்ள தனியார் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல தொழில்பயிற்சி நிறுவனத்துக்கு சென்ற மாணவர் கோகுல் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் தொழிற்கல்வி நிறுவனம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தனர். எங்கும் காணவில்லை.

    இந்த நிலையில் மாணவரின் தந்தை கென்னடிக்கு மர்ம நபர்கள் போனில் பேசினர்.

    உங்களது மகனை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.3 லட்சம் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்போம் என கூறி மிரட்டல் விடுத்தனர். இதனால் பதறிப்போன மாணவனின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் மாணவனை மீட்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மர்ம நபர்கள் பேசிய செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்க தொடங்கினர்.

    இதில் மர்ம கும்பல் வள்ளிமலை, மேல்பாடி பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    காட்பாடி முதல் ராணிப்பேட்டை வரையிலான சாலைகள் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதனால் மர்ம கும்பல் இன்று அதிகாலை 5 மணிக்கு வள்ளிமலை கோவில் அருகே மாணவனை விட்டு சென்றுவிட்டனர். தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டனர்.

    இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தனர். அதில் அவரது தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் 3 மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாக கோகுல் தெரிவித்தார்.

    இதனையடுத்து 3 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×