search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து ஏற்பட்ட கடையை படத்தில் காணலாம்.
    X
    தீவிபத்து ஏற்பட்ட கடையை படத்தில் காணலாம்.

    அறந்தாங்கி அருகே வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து

    அறந்தாங்கி அருகே இன்று அதிகாலை வாகன உதிரிபாக கடையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் அங்கு மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்றிரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது கடைக்குள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    தீ மளமளவென பற்றி அருகில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் அருகில் இருந்த கண்ணாடி கடைக்கும் பரவியது. உடனே இது குறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி மோகன்தாஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஆயில்கள் இருந்ததால் தீ வேகமாக பற்றி எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இருப்பினும் மோட்டார் உதிரிபாக கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும். மேலும் மற்ற கடைகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×