என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 பேரின் உயிரை பலிவாங்கிய செப்டிக் டேங்க்
    X
    2 பேரின் உயிரை பலிவாங்கிய செப்டிக் டேங்க்

    செப்டிக் டேங்க் கட்டும் பணியின்போது 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

    கடலூர் அருகே இன்று காலை செப்டிக் டேங்க் கட்டும் பணியின்போது 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகங்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அந்த பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

    இதையொட்டி வீட்டு பகுதியில் செப்டிக் டேங்க் கட்டும் பணி நடந்து வந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டப்பட்டு மேல்பகுதி மூடப்பட்டிருந்தது.

    செப்டிக் டேங்கின் முன்பகுதி சிறிய சாக்கு போட்டு அடைக்கப்பட்டிருந்தது. செப்டிக் டேங்கில் உள்பகுதியில் சிமெண்ட் பூசுவதற்காக இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள கா.குப்பத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 49), சித்தேரிக்கரையை சேர்ந்த ராஜ்குமார்(40) உள்பட 4 கட்டிட தொழிலாளர்கள் வந்தனர்.

    செப்டிக் டேங்கின் முன்பகுதியில் மூடப்பட்டி ருந்த அந்த சாக்கினை அகற்றிவிட்டு முதலில் செப்டிக் டேங்கிற்குள் மாணிக்கம் இறங்கினார். நீண்ட நேரம் ஆகியும் அவரிடம் இருந்த எந்தவித சத்தமும் வரவில்லை. அதன்பின்னர் ராஜ்குமார் உள்ளே இறங்கினார். 1 மணிநேரம் ஆகியும் அவரிடமும் எந்தவித சத்தமும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் 2 பேரின் பெயர்களை கூப்பிட்டு அழைத்தனர்.

    ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. உடனே சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கவசத்துடன் செப்டிக் டேங்கிற்குள் இறங்கினர்.

    அங்கு மாணிக்கம், ராஜ்குமார் ஆகியோர் பிணமாக கிடந்தனர். செப்டிக் டேங்க் மூடப்பட்டிருந்ததால் அது காற்று புகாத பகுதியாக இருந்தது. எனவே அதனுள் இறங்கிய மாணிக்கம், ராஜ்குமாரும் மூச்சுதிணறி இறந்திருப்பது தெரியவந்தது.

    அவர்களது உடலை தீயணைப்பு படையினர் மேலே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×