search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
    X

    பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

    பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

    குடிநீர் வாரியம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.

    பெரம்பூர் தீட்டிதோட்டம் 1-வது தெரு முதல் 7-வது தெரு மற்றும் ஜானகிராமன் நகர் பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. குழாய்களில் குடிநீர் வரும்போது கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நிறம் மாறி வரும் தண்ணீர் குடிக்க இயலாத நிலையில் இருப்பதால் அதனை வீட்டு உபயோகத்திற்குதான் பயன்படுத்தும் நிலை உள்ளது.


    குடிநீர் தேவை அதிகரித்து வரும் கோடை காலத்தில் இப்பிரச்சினையை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பேப்பர் மில் சாலைக்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் வழியில் நிறுத்தப்பட்டன. கார், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத படி நின்றன.

    தகவல் அறிந்து செம்பியம் மற்றும் திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    ஆனாலும் 2 மணி நேரம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாற்று பாதை வழியாக சென்றனர்.

    Next Story
    ×