search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காட்சி.
    X
    குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காட்சி.

    விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலடி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

    இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களான கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாச்சலம் பாலக்கொல்லை சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுண்ணாம்பு கலந்த குடிநீர் வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிப்பதுடன் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×