search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் 12 அடியாக குறைந்தது
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 12 அடியாக குறைந்தது

    நகர்புறங்களில் மழை பெய்தாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 12.80 அடியாக மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை மழை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பெய்து பலத்த சேதம் ஏற்படுத்தியது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது முதல் மழை இல்லாமல் வெயில் 105 டிகிரி வரை கொளுத்தியது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் வடபகுதியான சங்கரன்கோவில் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது இடி-மின்னலும் முழங்கியது. சங்கரன் கோவிலில் மட்டும் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 8 மில்லி மீட்டரும், சிவகிரியில் 7 மில்லி மீட்டரும், கருப்பாநதி பகுதியில் 4 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் மழை பெய்தபோது, மனோ கல்லூரியில் தேர்வு எழுதி முடித்த பி.ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் மகாலட்சுமி (19). பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு மாணவி அவசரம் அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த பகுதியில் சக்திவாய்ந்த இடி-மின்னல் தாக்கியது. இதில் கட்டிடத்தின் ஒரு சுவர் இடிந்து மாணவி மீது விழுந்தது. மேலும் மாணவி மகாலட்சுமி மீதும் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மகாலட்சுமி பலியானார்.

    இன்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் இன்று பகல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நகர்புறங்களில் மழை பெய்தாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 12.80 அடியாக மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 70.07 அடியாகவும், சேர்வலாறு அணையில் 47.51 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.
    Next Story
    ×