search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை- திருச்சி சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை
    X

    சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை- திருச்சி சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை

    திருச்சியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி ஷெரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யு.கே.ஜி. படித்து வந்தாள். அவளது வீட்டின் அருகே திருச்சி கூனிபஜார் கோரி மேடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்கிற முகமது இஸ்லாம் (43) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பக்கத்து வீடு என்பதால் ஷெரீனாவிடம் அப்பாஸ் நன்றாக பழகி வந்துள்ளார். கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளார்.

    அப்பாசுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள் உள்ள நிலையில், பெண் குழந்தை இல்லாததால் ஷெரீனாவிடம் மிகவும் பாசமுடன் பழகியுள்ளார். இதனால் அவளது பெற்றோர் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 26.11.2017 அன்று ஷெரீ னாவை தனியாக அழைத்து சென்ற அப்பாஸ், அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த ஷெரீனாவிடம் அவளது பெற்றோர் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறவே அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அப்பாசிடம் சென்று தட்டி கேட்டபோது, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ஷெரீனாவை துண்டு துண்டாக வெட்டி கொன்று ஆற்றில் வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 20.2.2018 அன்று திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷெரீனாவின் தந்தை புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி மகிளினி முன்னிலையில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அப்பாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×