search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்
    X

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

    வழக்கில் முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை கடந்த வாரம் 4 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம பெற்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கடந்த மாதம் 12-ந் தேதி திருநாவுக்கரசு உள்பட 4 பேர் காரில் வைத்து தன்னிடம் அத்து மீறியதாகவும், தன்னை மிரட்டி நகையை பறித்ததாகவும் கூறி இருந்தார்.

    ஆனால் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில், கடந்த மாதம் 12-ந் தேதி நான் பொள்ளாச்சியில் இல்லை. அன்றைய தினம் நான் எனது தந்தை கனகராஜூடன் கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன் என கூறி இருந்தார்.

    இதையடுத்து காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் மயூராஜெயக்குமார் நேற்று கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.

    அதில், கடந்த மாதம் 12-ந் தேதி பொள்ளாச்சியை பகுதியை சேர்ந்த முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகருடன் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட அலுவலகத்துக்கு வந்தனர். திருநாவுக்கரசு யார் என்றே எனக்கு தெரியாது. அவர் கட்சியில் உறுப்பினராக இல்லை. அவரது தந்தை காங்கிரஸ் அனுதாபி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை திருநாவுக்கரசு காரில் அழைத்து வந்ததாக கட்சியினர் கூறினர் என கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிப்ரவரி 12-ந் தேதி திருநாவுக்கரசு காங்கிரஸ் அலுவ லகத்துக்கு வந்தாரா? என்று உறுதி செய்வதற்காக எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். மற்றபடி இந்த வழக்குக்கும், திருநாவுக்கரசுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    திருநாவுக்கரசு கூறியது உண்மை தானா? என்று உறுதிபடுத்துவதற்காக என்னை சாட்சிக்காக அழைத்துள்ளனர். திருநாவுக்கரசை காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் வந்து சாட்சி சொல்வேன். இதுதொடர்பாக கட்சி தலைமைக்கும் விளக்கம் அளித்து விட்டேன் என்றார்.

    மயூரா ஜெயக்குமார் பேட்டியின் போது அவருடன் இருந்த பொள்ளாச்சி ராஜசேகர் கூறியதாவது:-

    பிப்ரவரி 12-ந் தேதி மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்க என்னுடன் 30 பேர் வந்தனர். அப்படி வந்தவர்களில் சின்னப்பாளையம் கனகராஜூம் ஒருவர். அவருக்கு கார் ஓட்ட முடியாது என்பதால் மகன் திருநாவுக்கரசு கார் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் கட்சியில் உறுப்பினர்களாக இல்லை. இவர்கள் யாரையும் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு தெரியாது என்றார்.

    சம்பவம் நடந்த 12-ந் தேதி அன்று திருநாவுக்கரசு மதியம் 2 மணி வரை கோவையில் இருந்து விட்டு அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி உள்ளார். இதுதொடர்பாக திருநாவுக்கரசின் தந்தை உள்பட மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், வழக்குபதிவு செய்யப்பட்ட பின்னர் போலீசார் தேடுவதை அறிந்து திருநாவுக்கரசு ஆந்திரா தப்பிச் சென்று தலைமறைவானார். இதற்கு அவரது தோழி ஒருவரும், அரசியல் பிரமுகர்கள் சிலரும் உதவியது தெரிய வந்துள்ளது. அதன்பேரில் மேலும் சிலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்.

    இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தொலைபேசியில் ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றை தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் குறிப்பிட்ட சிலரின் புகார்களை ஆதாரமாக பெற்று வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாகவும், இவ்வழக்கில் கைதான சபரி ராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாகவும் சட்ட நிபுணர்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #PollachiCase #CBCID
    Next Story
    ×