search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் எதிரொலி- மதுபாட்டில்கள் வாங்க புதிய கட்டுப்பாடு
    X

    தேர்தல் எதிரொலி- மதுபாட்டில்கள் வாங்க புதிய கட்டுப்பாடு

    பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #LSPolls
    சென்னை:

    பண்டிகை, திருவிழா காலங்களில் மதுவிற்பனை அதிக அளவில் இருக்கும்.

    தேர்தல் காலங்களிலும் மதுவிற்பனை சூடுபிடிக்கும். மது குடிப்பவர்களால் அடிதடி, தகராறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    எனவே இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மதுபாட்டில்களை ஸ்டாக் வைப்பதற்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய கட்டுப்பாட்டின்படி ஒருவர் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் போன்ற மது பாட்டில்களை வாங்க சென்றால் அவர் 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 2 பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதுபோல் 650 மில்லிலிட்டர் அளவுகொண்ட 4 பீர் பாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும்.

    தற்போது 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 12 மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். இனி இதுபோன்ற 4 மதுபாட்டில்களை மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும். குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட 12 ஒயின் பாட்டில்களை வீட்டில் வைக்கலாம்.

    உயர் ரக மதுபானங்கள் வாங்குவோருக்கு ஒரே நேரத்தில் 5 முழுபாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும். இவர்களுடைய விவரங்கள் அட்டை எண் ஆகியவை பதிவு செய்தபிறகே இதை வாங்கலாம். வழக்குப்பதிவு நெருங்கும்போது இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகும். வழக்குப்பதிவு நாளில் மதுக்கடைகள் மூடப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. மதுவிற்பனை கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மதுபான விற்பனை, இருப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தல் போன்றவற்றை கண்காணிப்பார்கள். இந்த தகவல்களை டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #LSPolls
    Next Story
    ×