என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருதலை காதலால் விபரீதம்- வயது மூத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    ஒருதலை காதலால் விபரீதம்- வயது மூத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    கும்பகோணம் அருகே ஒருதலை காதலால் வயது மூத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கும்பகோணம்:

    இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப், முகநூல் போன்ற செயலிகள் பல பயன்பாட்டுக்கு உதவினாலும், இன்றைய இளம் பெண்கள்- வாலிபர்கள் இடையே அது பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களுக்கும் அடிக்கோலாகி வருகிறது. மேலும் முதன்முறையாக ஒரு பெண்ணை பார்த்தவுடன் அந்த பெண் தன்னை விரும்பாவிட்டாலும், திருமணத்துக்கு மிரட்டுவது, கொலை செய்வது, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களில் இன்றைய இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போதை போன்ற பழக்கங்களினாலும் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் பெண் பிள்ளைகளை பெற்றோர் வெளியில் அனுப்பவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பெண்களும் தங்கள் பெற்றோரை உதறிவிட்டும், முகநூலிலும், முகவரி தெரியாத நபர்களையும் நம்பி வாழ்கையை இழந்தும், தொலைத்தும் வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் தான் கும்பகோணம் அருகே அரங்கேறி உள்ளது.

    கும்பகோணம் அருகே மாத்தி மெயின்ரோடு அண்ணலக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் மகள் பூரணி(வயது26). நன்னிலம் பகுதி மாப்பிள்ளை குப்பத்தை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் ஜமாருல்நவாஸ்சுதீன்(24). இரு குடும்பத்தினரும் நண்பர்கள் போல் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வயதில் தன்னை விட மூத்த பூரணியை ஜமாருல்நவாஸ்சுதீன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பூரணிக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதையறிந்த ஜமாருல்நவாஸ்சுதீன் அதிர்ச்சியடைந்தார். இதனால் எப்படியாவது பூரணியை சந்தித்து தனது காதலை தெரிவித்து திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க முடிவு செய்தார். இதையடுத்து பூரணியை தனியே சந்திக்கும் வாய்ப்பிற்காக ஜமாருல்நவாஸ்சுதீன் காத்திருந்தார். நேற்று பூரணி மொபட்டில் வீட்டை விட்டு வெளியில் செல்வது அவருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பின் தொடர்ந்து வந்த ஜமாருல்நவாஸ்சுதீன் அண்ணலக்ரகாரம் பகுதியில் அவரை வழிமறித்து நிறுத்தி தனது காதலை தெரிவித்து தன்னையே திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

    அதற்கு பூரணி மறுத்து நீ வயதில் என்னை விட இளையவன் மட்டுமல்ல. நாம் குடும்ப நண்பர்களாக தான் பழகியுள்ளோம். இது தவறு என்று எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜமாருல்நவாஸ்சுதீன் ஒரு விழாவில் இரு குடும்பத்தினரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவில் தன் அருகில் நிற்கும் பூரணி படத்தை காட்டி, இதை மாப்பிள்ளை வீட்டாரிடம் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவேன். என்னை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பூரணி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் இதுபற்றி கூறி அழுதுள்ளார். இதில் அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் தனது பெற்றோருடன் பட்டீஸ்வரம் போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் பற்றி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக ஜமாருல்நவாஸ்சுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த வாரம் இதேபோல் கும்பகோணம் கஸ் நிலையத்தில் தான் விரும்பிய பெண் வேறு ஒருவருடன் பேசியதால் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதும். அந்த வாலிபரை பெண்ணின் நண்பர், அண்ணன் ஆகியோர் அழைத்து சென்று ஓரிடத்தில் வைத்து தாக்கிய சம்பவமும் நடந்தேறியது. கும்பகோணத்தில் நாளுக்குநாள் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×