search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் பள்ளி ஆசிரியைகளை கேலி செய்து ‘டிக்-டாக்’ வீடியோ - 17 மாணவிகள் மீது நடவடிக்கை
    X

    பாளையில் பள்ளி ஆசிரியைகளை கேலி செய்து ‘டிக்-டாக்’ வீடியோ - 17 மாணவிகள் மீது நடவடிக்கை

    பாளையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியரை கேலி செய்து டிக்-டாக் வீடியோ எடுத்து பரப்பிய 17 மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #TikTok
    நெல்லை:

    பாளையில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மாணவிகள் அனைவரும் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். தினமும் தேர்வுக்காக படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகள் சிலர் படிக்கும் வேளையில் தங்கள் செல்போனில் டிக்-டாக் ஆப் மூலம் ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்து வீடியோ எடுத்தனர்.

    ஆசிரியர்களை மறைமுகமாக வீடியோ எடுத்து அதை சினிமா வசனங்களுக்கு ஏற்றவாறு டிக்-டாக் செய்து வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் சக மாணவிகளிடையே பரவியது. அவர்கள் வாட்ஸ்-அப்பில் மற்ற மாணவிகளுக்கும் பரப்பினர். தொடர்ந்து இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனிடையே இந்த விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி கூறினர்.

    பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தியபோது, 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் 17 பேர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கையாக 17 மாணவிகளையும் வீட்டில் இருந்து தேர்வுக்கு படிக்குமாறு பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர் நிர்வாகத்தினரிடம் இதுபற்றி கேட்டனர். அதற்கு மாணவிகளை தேர்வு எழுத தடை செய்யவில்லை.

    பள்ளியில் இருந்து தேர்வுக்கு படிக்க தடை விதித்துள்ளோம் என்றனர். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்," தற்போது தேர்வு நேரம் என்பதால் பல பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை அளித்துள்ளார்கள். பாளை பள்ளியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மாணவர்கள் யாரையும் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தடை செய்ததாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றனர். #TikTok
    Next Story
    ×