என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு குரங்குக்காக ஊரை காலி செய்து கோவிலில் தஞ்சம் அடைந்த கிராம மக்கள்
    X

    ஒரு குரங்குக்காக ஊரை காலி செய்து கோவிலில் தஞ்சம் அடைந்த கிராம மக்கள்

    சீர்காழி அருகே கடந்த 1 மாதமாக 20பேரை கடித்ததுடன் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் குரங்கினால் கிராம மக்கள் ஊரை காலிசெய்துவிட்டு கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரை மேடு ஊராட்சி தென்னலக்குடி கிராமம் கன்னிக்கோயில் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 1 மாதமாக எங்கிருந்தோ வந்த ஒரு ஆண் குரங்கு வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்து செல்லத் தொடங்கியது. நாளடைவில் குரங்கின் தொந்தரவு அதிகரித்தது. நாளடைவில் அந்த குரங்கின் அட்டகாசம் எல்லை இல்லாமல் சென்று கிராம மக்கள் விரட்டி 20-க்கும் மேற்பட்ட நபர்களை குரங்கு கடித்துவிட்டு தப்பியது. மேலும் கிராமத்தில் உள்ள ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள், வளர்ப்பு நாய்கள் ஆகியவற்றையும் குரங்கு கடித்து தொந்தரவு செய்து வந்தது.


    கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 70வயது மூதாட்டியை குரங்கு கடித்து அவருக்கு முக்கிய நரம்பு துண்டானதில் சிகிச்சை அளித்தும் சுயநினைவின்றி தற்போது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சீர்காழி வனத்துறைக்கு தகவல் அளித்து வனத்துறை சார்பில் குரங்கினை பிடிக்க கன்னிக்கோயில் தெருவில் அடர்ந்து பகுதியில் கூண்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கூண்டிலும் குரங்கு சிக்காமல் தப்பியதுடன் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.



    இதனால் வெறுத்துப் போன கிராம மக்கள் நேற்று உடைமை பொருட்களான உடைகள், பாய், தலையணை ஆகியவற்றை மூட்டை கட்டிக் கொண்டு வீடுகளை பூட்டி விட்டு ஊரை காலி செய்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கன்னிக்கோயில் தெரு அருகேயுள்ள கோவிலில் தஞ்சம் புகுந்தனர். மேலும் குரங்கை பிடித்து அப்புறப்படுத்தும் வரையில் கோயிலிலேயே தங்க உள்ளதாகவும் தெரிவித்து அங்கேயே உணவு தயாரித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சீர்காழி வனத்துறை ரேஞ்சர் கருப்பசாமி கூறியதாவது:-

    கன்னிக்கோயில் தெருவில் கடந்த சில வாரங்களாக ஒரு ஆண் குரங்கு பொது மக்களுக்கு தொந்தரவு அளித்து வருவதாக தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று குரங்கை பிடிக்க 3 முறை கூண்டு, வலைகள் விரித்தும் அதில் எதிலும் சிக்காமல் குரங்கு தப்பி வருகிறது.

    அதற்காக அதனை கையாளும் நிபுணர்கள் திருவாரூர் வனத்துறை அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். விரைவாக அந்த குரங்கை பிடித்து விடுவோம். இந்த குரங்கு நீண்ட நாட்களாக எங்கேனும் அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாக இருக்கலாம். அதனால் தான் தப்பி வந்ததும் மனிதர்கள் உள்ளிட்டவர்கள் மேல் கோபமாக தாக்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே குரங்கின் அட்டகாசம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் நாக சதீஷ் (நாகை), அறிவொளி (திருவாரூர்) ஆகியோர் வனத்துறை ஊழியர்களுடன் தென்னலக்குடி கிராமத்தில் முகாமிட்டு குரங்கின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×