search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் குழந்தைகளை பாதுகாப்பதை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது - நாராயணசாமி
    X

    பெண் குழந்தைகளை பாதுகாப்பதை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது - நாராயணசாமி

    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று நடந்தது.

    துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்வதை பார்க்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

    புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 50 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதன்மூலமே புதுவையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.



    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

    வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பார்க்க முடியாது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை நடக்கிறது. குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது.

    கணவரை இழந்தால் உடன்கட்டை ஏறுவதும் தொடர்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையும், கற்பழிக்கப்படும் நிலையும் உள்ளது. இவற்றை ஒழித்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும்.

    எங்கள் அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவையில் பெண்கள் 85 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதுவையில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த பயிற்சி முகாமில் விவாதித்து புதிய கருத்துக்களை, திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவம், பாகுபாடு குறித்து அதேகொம் நெட்வொர்க் லலிதாம்பாள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் வரலட்சுமி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து அன்னமேரி, தயாவதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மகளிர் நல பிரிவு துணை இயக்குனர் வரலட்சுமி நன்றி கூறினார். #Narayanasamy

    Next Story
    ×