search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
    X

    பெரியகுளத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

    பெரியகுளத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருவான வரித்துறையினர் 20 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்ரீஅம்பாள் ஹார்டுவெர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான சிமெண்ட், கம்பிகள் மற்றும் தளவாட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இது மட்டுமின்றி நகை அடகு கடையும் வைத்து நடத்தி வருகின்றனர். பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்யும் டீலராக உள்ளனர்.

    இந்நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை. மேலும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன.

    இதனையடுத்து மதுரை வருமானவரித்துறை இணை ஆணையர் தலைமையில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் அந்த நிறுவனத்துக்கு வந்தனர்.

    தலைமை அலுவலகம், குடோன்கள், உரிமையாளர், அவரது மகன்கள், மேலாளர் வீடு உள்பட 8 இடங்களில் இக்குழுவினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து இன்று காலை முடிந்தது. சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். சோதனை நடந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×