search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமலை யானை முகாமிற்கு வந்த சமயபுரம் கோவில் யானை மசினி.
    X
    முதுமலை யானை முகாமிற்கு வந்த சமயபுரம் கோவில் யானை மசினி.

    பாகனை கொன்ற சமயபுரம் கோவில் யானை முதுமலையில் பராமரிப்பு

    சமயபுரம் கோவில் பாகனை கொன்ற யானை மசினி முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர். #Masini
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் இருந்த 12 வயது பெண் யானை மசினி திருச்சி சமயபுரம் கோவிலுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த மசினி சமயபுரம் கோவிலில் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டதால் அதீத சத்தம் மற்றும் கூட்டத்தை பார்த்து அடிக்கடி மிரண்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை பராமரித்து வந்த பாகன் ராஜேந்திரனை மிதித்து கொன்றது.

    இதனால் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களால் யானையை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. மேலும் யானைக்கு நோய் தொற்று இருந்தது.

    இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் முழுமையாக குணம் அடையவில்லை. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மசினி யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து லாரியில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. அங்கு யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து முதுமலை கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர்.

    மசினியை முன்பு முதுமலையில் பராமரித்து வந்த பாகன் பொம்மன் யானை மீண்டும் இங்கு வந்ததால் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.

    நீண்ட நாட்கள் ஆனாலும் தன்னை மசினி அடையாளம் கண்டு கொண்டதாக வியப்புடன் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, 2006-ம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்தில் 3 மாத குட்டியாக மசினி கண்டெடுக்கப்பட்டு தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

    9 ஆண்டுகள் யானைகள் முகாமில் எனது பராமரிப்பில் மசினி வளர்ந்தது. மிகவும் அமைதியாக, சொன்ன பேச்சை தட்டாமல் வளர்ந்தது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பி உள்ளது. இனி இங்கேயே நிரந்தரமாக மசினி தங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    முதுமலையில் மாலையில் குளிர் வாட்டுவதால் மசினி யானை ஒரு கொட்டகையில் வைத்து பாராமரிக்கப்படும் என வனசரகர் தயானந்த் கூறினார்.  #Masini
    Next Story
    ×