search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3½ லட்சம் கொள்ளை: துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
    X

    டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3½ லட்சம் கொள்ளை: துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

    ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #Tasmac

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெப்பளாம்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த நம்பியாம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது 42), விற்பனையாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (50) உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு இவர்கள் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஊத்தங்கரை- அரூர் சாலையில் காட்டேரி பகுதியில் அவர்கள் சென்றபோது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டனர்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆனந்தன் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து 2 பால்ரஸ் குண்டுகள் அகற்றப்பட்டன.

    காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த முருகன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஊத்தங்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) தங்கவேல், தடயவியல் நிபுணர் மாணிக்கம் உள்பட பலர் நேரில் வந்து சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் ஐ.ஜி. பெரியய்யா போலீசாரிடம் கூறியதாவது:-

    இது ஒரு சவாலான வழக்கு. இதை உடனடியாக கண்டுபிடிக்காவிட்டால் மேலும் கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி விடும். எனவே உடனடியாக இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கொள்ளை குறித்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எஸ்.பி.எம்.எல். என்று அழைக்கப்படும் சிங்கிள் பேரல் மஸ்லோடு கன் வகை துப்பாக்கி மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் கொள்ளையர்கள் சுட்டது தெரியவந்து உள்ளது.

    இந்த வகை துப்பாக்கிகளை உள்ளூரை சேர்ந்த மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் வைத்திருப்பது வழக்கம். எனவே கொள்ளையர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே உள்ள செல்போன் டவரில் உபயோகத்தில் இருந்த செல்போன் நம்பர்களை இன்று போலீசார் கேட்டு வாங்கி உள்ளனர். அந்த செல்போன் எண்களை வைத்து துப்புதுலக்கும் பணியில் ஒரு தனிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல சம்பவம் நடந்த இடம் அருகே அரூர்- அனுமன்தீர்த்தம் சாலையிலும், ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலையிலும் காட்டு பகுதி உள்ளது. இங்கு மிருகங்களை வேட்டையாட சிலர் கள்ளத்துப்பாக்கி வைத்து உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படி வனத்துறையினரும், போலீசாரும் கேட்டுக் கொண்டபோது ஒருசிலர் மட்டுமே துப்பாக்கிளை ஒப்படைத்தனர். பலர் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை. அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்கள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி கொள்ளை நடந்தது. தற்போது ஊத்தங்கரையில் டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை நடந்து உள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×