search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பன் தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் - ரெயில்கள் இன்று இயக்கப்படுமா?
    X

    பாம்பன் தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் - ரெயில்கள் இன்று இயக்கப்படுமா?

    பாம்பன் தூக்குபாலத்தில் விரிசலை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ராமேசுவரத்துக்கு ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. #PambanBridge #Ramanathapuram

    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள் தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இருபிரிவுகளாக உள்ள இந்த பாலத்தில் கப்பல்கள் செல்லும்போது திறக்கப்படும்.

    கஜா புயல் காரணமாக தூக்குப்பாலத்தை திறக்க பயன்படுத்தப்படும் சுழலும் பல்சக்கரங்களில் பழுது ஏற்பட்டது. அப்போது ரெயில்வே ஊழியர்கள் இதனை தற்காலிகமாக சரிசெய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாம்பன் தூக்குப்பாலம் இணையும் இடத்தில் பாலம் ஒன்றுக்கொன்று சேராமல் சற்று விரிசல் ஏற்பட்டு தூக்கிக்கொண்டு இருந்தது. தண்டவாளங்கள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.


    இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியவில்லை.இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட என்ஜினீயர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் மதுரை- ராமேசுவரம் வந்த பாசஞ்சர் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. இதேபோல் ராமேசுவரம்- திருச்சி பாசஞ்சர் ரெயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டது. இதன்காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பஸ் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

    மதுரையில் இருந்து வந்த பொறியாளர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று மாலை முதல் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த பணி நீடித்தது. ஆனால் பணி முடியவில்லை

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே மற்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் ரெயில் நிலையம் வெறிச் சோடியது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தூக்குப் பால விரிசலை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று மதியத்துக்குள் சீரமைப்பு பணி முடிந்தால் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின்னர் ரெயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PambanBridge #Ramanathapuram

    Next Story
    ×