search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
    X

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நகர்ப்புறங்களில் சற்று குறைவான மழையே பெய்துள்ளது. ராதாபுரத்தில் 14 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,511 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 318 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழையின் போது மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 80 அடியாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மீண்டும் 100 அடியை தாண்டியுள்ளது.

    இதுபோல கடனாநதி- 75.80, ராமநதி- 69, கருப்பாநதி- 69.23, குண்டாறு- 36.10, வடக்கு பச்சையாறு- 31, நம்பியாறு- 21.62, கொடுமுடியாறு- 42, அடவிநயினார்- 98.50 அடிகளாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    குற்றாலத்தில் நேற்று காலை அதிகளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று பிற்பகல் தண்ணீர் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-61
    சேர்வலாறு-47
    ராமநதி-15
    ராதாபுரம்-14
    கடனாநதி-10
    சேரன்மகாதேவி-9
    ஆய்க்குடி-4
    அம்பை-2
    சங்கரன்கோவில்-2
    நெல்லை- 1.2
    மணிமுத்தாறு- 1.2
    செங்கோட்டை- 1 #ManimutharDam
    Next Story
    ×