search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதமந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து திருமணம் செய்த மத்திய அரசு ஊழியர்
    X

    வேதமந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து திருமணம் செய்த மத்திய அரசு ஊழியர்

    அரியலூர் அருகே வேத மந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து மத்திய அரசு ஊழியரின் திருமணம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழுரை சேர்ந்தவர் சக்திவேல். மத்திய அரசு ஊழியரான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சத்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தமிழ்மொழி மேல் உள்ள பற்றுதல் காரணமாக தனது திருமணத்தை திருக்குறள்படி நடத்த சக்திவேல் முடிவு செய்தார். அது பற்றி மணமகள் வீட்டில் தெரிவித்த போது, முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சக்திவேல் தனது நிலையில் உறுதியாக இருந்ததால், அவரது விருப்பத்திற்கு அனைவரும் சம்மதித்தனர். இதையடுத்து  தா.பழுரில் உள்ள திருமண மண்டபத்தில் வேத மந்திரங்களின்றி சக்திவேல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது திருவள்ளுவர் உருவச்சிலை வைத்து, புலவர் மோகன் திருக்குறள் வாசித்து அதன் பொருள் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து மணமகன் சக்திவேல், மணமகள் சத்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் அரசு மற்றும் வேப்ப மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, உறவினர்கள் ஆசீர்வாதம் செய்தனர். இந்த திருக்குறள் திருமணத்தை உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர். திருமணத்தையொட்டி மண்டபம் முழுக்க இல்வாழ்க்கை, வாழ்க்கை துணை நலம்,மக்கட்பேறு, அன்புடமை ஆகிய 4 அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிகள் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தன.

    திருக்குறள் திருமணம் செய்த சக்திவேலின் தந்தை நீலகண்டன் டீக்கடை வைத்துள்ளார். இவர் தனது பேச்சின் போது அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். இதனால் சக்திவேலுக்கு சிறுவயது முதலே திருக்குறள் மீதும், தமிழ்மொழி மீதும் தீராத பற்று ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால் திருக்குறள்படி தனது திருமணத்தை நடத்தியுள்ளார்.
    Next Story
    ×