search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
    X

    மதுரை மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

    மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    மதுரை:

    தீபாவளி நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பரிசு பொருட்கள், இனிப்புகள், பட்டாசு உள்ளிட்டவைகளை இனாமாக வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று அதிகாரிகள் பெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை மாநகராட்சி அலுவலகத்திலும் உயர் அதிகாரிகள் தீபாவளி பரிசு பொருட்கள் பெருவதாக கிடைத்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் 20 போலீசார் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள நகர பொறியாளர் அறைக்கு பல ஒப்பந்ததாரர்கள் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகர பொறியாளர் அறைக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து நகர பொறியாளர் அரசு மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சம் ரொக்கம், தலா 10 கிராம எடை கொண்ட 12 வெள்ளி காசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், 2 வெள்ளி டம்ளர், பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சுமார் 3 மணி நேரம் அதிகாரி அரசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்து பட்டியலிடப்பட்டு அதிகாரியிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.

    இந்த நிலையில் நகர பொறியாளர் அறையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக அதிகாரி அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஒரு சஸ்பெண்டு அதிகாரி பின்புலமாக இருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    நேற்று காலை முதல் மாலை வரை நகர பொறியாளர் அரசு மாநகராட்சி பணிகளில் ஈடுபட்டார். சரியாக 7.30 மணிக்கு அலுவலகத்துக்கு சென்றார். அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஏற்கனவே இதே பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்படதாகவும் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×