search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.700 கோடி மோசடி வழக்கு: சுபிக்‌ஷா சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ரூ.700 கோடி மோசடி வழக்கு: சுபிக்‌ஷா சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு

    ரூ.700 கோடி மோசடி வழக்கின், அமலாக்கப்பிரிவு விசாரணை அறிக்கையை செசன்சு கோர்ட்டு ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    குஜராத், டெல்லி, மராட்டியம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆர்.சுப்பிரமணியன் என்பவர் இருந்தார்.

    இவர், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தினார். இந்த நிறுவனங்களின் பெயரில், பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், ‘சுபிக்‌ஷா’ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    பின்னர், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யாமல், இடைக்கால அறிக்கையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் தாக்கல் செய்தார். இதை மாவட்ட நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், வழக்கை விசாரணைக்கு நீதிபதி எடுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சுபிக்‌ஷா சுப்பிரமணியம் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், மேல் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல இந்த சட்டத்தின்படி, புலன் விசாரணை முடிந்ததும், காலதாமதம் இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறது. அதற்கு கால அளவை நிர்ணயம் செய்யவில்லை.

    அதனால், இடைக்கால அறிக்கையை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இதுபோல பிற அம்சங்களையும் கீழ் கோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்த பின்னர் தான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் விதிமீறல் எதுவும் இல்லை. சட்டவிரோதமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    Next Story
    ×