search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியை பிரித்ததால் வேதனை-தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
    X

    காதலியை பிரித்ததால் வேதனை-தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

    காதலியை பிரித்ததால் வேதனையடைந்த வாலிபர் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் (வயது 19). முருகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வினோத் கூலி வேலை பார்த்து தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோரை பராமரித்து வந்துள்ளார்.

    அதே தெருவில் வசிக்கும் முருகேசன் மகள் காளீஸ்வரி (17). பிளஸ்-2 முடித்து உள்ளார். இருவரும் நட்பாக அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். இதனை ஊர் மக்கள் தவறாக புரிந்து கொண்டு அவர்கள் காதலிப்பதாக நினைத்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரையும் சந்திக்க கூடாது என்று சத்தம் போட்டு பிரித்து வைத்தனர்.

    நட்பாக பழகிய தங்களை காதலர்கள் என்று ஊர் மக்கள் கூறியதால் அவர்கள் 2 பேரும் உண்மையாகவே காதலிக்க தொடங்கினர். ஊராருக்கு தெரியாமல் தனிமையில் பேசி பழகி வந்தனர். இந்த வி‌ஷயம் காளீஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்களை மீண்டும் கண்டித்தனர். எனவே வினோத் தனது காதலி காளீஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இருந்தபோதும் காளீஸ்வரிக்கு திருமண வயது வரவில்லை என்பதால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார்.

    வினோத் கூலி வேலைக்காக கொடைக்கானல் மலை கிராமமான பள்ளங்கி, கோம்பை, பெருங்காடு, மாட்டுப் பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். மலை கிராமங்களில் வீடுகள் வரிசையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். இது போன்ற பகுதியில் காளீஸ்வரியை தங்க வைக்க முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று பெரும் பாறையில் நடந்த கோவில் திருவிழாவில் வினோத் தனது காதலியுடன் சென்றார். ஊர் மக்கள் திருவிழா உற்சாகத்தில் இருந்தபோது காளிஸ்வரியை கடத்திக் கொண்டு வினோத் மலை கிராமத்துக்கு வந்து விட்டார். அங்குள்ள ஒரு குடிசையில் காளீஸ்வரியை தங்க வைத்து வேலைக்கு சென்றார்.

    திருவிழாவுக்கு வந்த காளீஸ்வரி மாயமானதை அறிந்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். வினோத் வீட்டில் அவர் இல்லாததால் அவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என்று முடிவு எடுத்தனர்.

    அதன்படி அவர் வேலைக்கு செல்லும் கோம்பை மாட்டுப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கிருந்த காளீஸ்வரியை வீட்டுக்கு வருமாறு அடித்து இழுத்துச் சென்றனர். இந்த விபரம் வினோத்துக்கு தெரியவரவே அவர் ஓடி வந்து காளீஸ்வரியை காப்பாற்ற முயன்றார்.

    அவர்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த கும்பல் காளீஸ்வரியை மட்டும் அழைத்துச் சென்றனர்.

    தன் கண் முன்னே காதலியை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்து அவரை காப்பாற்ற முடியவில்லையே என கதறிய வினோத் அரிவாள் மனையால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ஆனால் இதனை பார்க்காதது போல அந்த கும்பல் வினோத்தை அங்கேயே விட்டு விட்டு செல்ல முயன்றனர்.

    இதனிடையே இந்த விபரம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வரவே அவர்கள் அங்கு திரண்டனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த வினோத்தை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அவரை அனுப்பி வைத்தனர். கொடைக்கானல் போலீசார் காளீஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×