search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓரினசேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு பாவச்செயல்- முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்
    X

    ஓரினசேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு பாவச்செயல்- முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்

    சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு பாவச்செயல் என முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #Section377 #SupremeCourt
    சென்னை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று கூறிய 377வது சட்டப் பிரிவை ரத்து செய்து ஓரின சேர்க்கை செல்லும். ஓரின சேர்க்கை குற்றமில்லை. இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல.

    சமுதாயம் மாறினால் தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையோடு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது இந்திய மக்களின் வரலாற்றை திசை திருப்பி இருப்பது மட்டுமல்ல இந்திய பண்பாட்டை தீர்த்து கட்டியிருக்கும் தீர்ப்பாகவும் இது அமைந்து இருக்கிறது.

    அமெரிக்காவில் 19 மாநிலங்களும் ஐரோப்பாவில் சில நாடுகளும் தெற்காசியாவில் தைவான் உள்பட சில பகுதிகளிலும் ஓரின சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிற வரலாறு உலகத்தின் பெருவாரியான மக்களால் எள்ளி நகையாடப்பட்டு வருகிறது.

    இப்பொழுது இந்தியாவையும் உலக மக்களின் ஏளனத்துக்கும், ஏசலுக்கும் உட்படுத்துகிற ஒரு பாதகமான பாவச்செயலை உச்சநீதிமன்றம் செய்து இருக்கிறது. இந்த தீர்ப்பு இந்திய மக்களின் பெரும்பாலாக உள்ளவர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பாகும். இந்த தீர்ப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். ஒப்பவும் மாட்டார்கள். ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்.

    நீதியற்ற தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். இந்திய நீதி திசைமாறி இருக்கிறது. தடுமாறி இருக்கிறது. தடம்புரண்டு இருக்கிறது. தரம் தாழ்ந்து இருக்கிறது. இந்திய பாரம்பரியத்தின் பெருமையையும், சிறப்பையும், பாதுகாக்கிற வகையில்

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அதோடு இணைந்து அனைத்து மாநில அரசுகளும் மேல் முறையீட்டுக்கு வழிவகை காண வேண்டும். நீதி குலையும் போது நாகரிகங்கள் அழிந்திருக்கின்றன என்னும் வரலாற்று உண்மையை நீதிபதிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் எண்ணிப்பார்த்து தமது கடமையை செவ்வையான முறையில் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Section377 #SupremeCourt
    Next Story
    ×