search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
    X

    தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

    தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று நடந்தது. #Allpartymeeting #Electionofficer

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க 9 கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

    ஆனால் 6 கட்சி பிரதிநிதிகளே பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகரும் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், வக்கீல் மனோஜ் பாண்டியன் ஆகியோரும், தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இரா. கிரிராஜன், நீலகண்டன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், தனிகாசலம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆறுமுகநயினார், ராஜசேகரன், தே.மு.தி.க. மதிவாணன், பாலசுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி பாரதிதாசன், கே.எஸ். மோகன், தேசியவாத காங்கிரஸ் சாரதி மற்றும் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (1-ந்தேதி) வெளியிடப்படுவதால், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம் இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்குதல் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தேர்தல் ஆணையர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும், சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்தும், ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    போலி வாக்காளர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குகள் இருப்பதை கண்டு பிடித்து அதனை ஊழியர்கள் முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். #Allpartymeeting #Electionofficer

    Next Story
    ×