search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவியல் துறையில் ஆராய்ச்சி- திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம்
    X

    குற்றவியல் துறையில் ஆராய்ச்சி- திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம்

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. #VCK #Thirumavalavan
    சென்னை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டார்.

    1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த மதம் மாற்றம் குறித்து இவர் ஆராய்ச்சி செய்தார்.

    மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை என்கிற தலைப்பில் மேற்கொண்ட அவரது ஆராய்ச்சிக்கான பொது வாய்மொழி தேர்வு (வைவா) நேற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கம் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் இந்த ஆய்வை திருமாவளவன் மேற்கொண்டார்.

    வாய்மொழி தேர்வில் பேராசிரியர் சொக்கலிங்கமும், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் பாஜ்பாயும் கலந்து கொண்டனர்.

    புறத்தேர்வராக பங்கேற்ற பாஜ்பாய் ஆராய்ச்சி குறித்து பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு திருமாவளவன் விடையளித்தார்.

    பின்னர் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்க அவர் பரிந்துரை செய்தார். அதன்படி நேற்று அவருக்கு மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பாஸ்கரன், டாக்டர் பட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது குற்றவியல் துறை தலைவர் பேராசிரியர்கள் பியூலாசேகர், மாதவ சோம சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டார்.

    முனைவர் பட்டம் பெற்றது பற்றி திருமாவளவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் மதம் மாற்றம் தொடர்பாக நாளேடுகளில் பார்த்தேன். சுமார் 200 குடும்பத்தினர் ஒரே நேரத்தில் மதம் மாறினார்கள். அது அப்போது பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது.

    அப்போது பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் யோகேந்திரா மந்த்லானா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் போன்றவர்கள் அக்கிராமத்திற்கு நேரிடையாக சென்றனர்.

    நீண்ட காலமாக இதன் பின்னணியை முழுமையாக ஆராய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

    ஆகவே முன்னாள் துணை வேந்தர் சொக்கலிங்கத்தின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். அண்மையில்தான் அந்த அறிக்கையை சமர்பித்தேன். அதற்கான ‘வைவா’ தேர்வு நேற்று நடந்தது. அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.

    ஆராய்ச்சியின் அறிக்கையினை ஏற்றுக் கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. எனது ஆராய்ச்சியில் 2 செய்திகளை உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

    இந்து மதம் மாற்றம் யாருடைய தூண்டுதலிலும் நடைபெறவில்லை. சாதி கொடுமையில் இருந்தும் அரசின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறுவதற்காக மக்களே மேற்கொண்ட முடிவு என்பதனையும் அவர்கள் இஸ்லாமியர்களாக மாறியதால் அவர்களது சமூக மதிப்பு, பொருளாளதார வளர்ச்சி தற்போது மேம்பட்டு உள்ளது என்பதையும் எனது ஆராய்ச்சி மூலம் நிறுவி இருக்கிறேன்.

    என்னுடைய கல்வித் தகுதிக்காக இந்த டாக்டர் பட்டத்தை நான் பெறவில்லை. இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் சமூக தகுதி உயர்ந்து இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஈடுபட்டேன். இந்த ஆராய்ச்சியில் எனக்கு மன நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
    Next Story
    ×