என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையான கைதிகள்.
    X
    வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையான கைதிகள்.

    வேலூர் ஜெயில் கைதிகள் மேலும் 15 பேர் விடுதலை

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார்.

    இந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை மொத்தம் 47 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 15 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    சென்னையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அயூப்கான் கூறுகையில்:-

    தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 1500 பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இருவரை 500 பேர் விடுதலை செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேர் தங்களை எப்போது விடுதலை செய்வார்களோ என்ற மனஉளைச்சலில் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் தினமும் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு பிறகு இப்போது தான் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.

    ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.

    ஆண்டுதோறும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் கைதிகள் விடுதலையை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் 8 மாதம் கழித்து தான் தாமதமாக நாங்கள் விடுதலையாகி உள்ளோம் என்றார். #MGRCentenary
    Next Story
    ×