search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் திடீர் மாயம்
    X

    அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் திடீர் மாயம்

    அஞ்சுகிராமம் அருகே பெண் என்ஜினீயர் திடீரென மாயமானதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

    அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண் வீட்டார் அவரை தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் கலந்து பேசி உறவினர்களுடன் சென்று அது பற்றி பேசினார்கள். இருவீட்டாருக்கும் அதில் பூர்ண திருப்தி ஏற்பட்டதால் இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது.

    மேலும் பெண் என்ஜினீயருக்கும் அந்த வாலிபருக்கும் மிகவும் சிறப்பாக நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை இன்று நடத்து வது என்றும் நாள் குறிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரும் திருமண வேலைகளை தொடங்கினார்கள். திருமண அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென்று மாயமானார். திருமணம் நடைபெற நாள் நெருங்கிவிட்ட நிலையில் அவர் மாயமானது அந்த குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் தங்கள் மகளை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். நேற்று வரை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்றும் தெரியவில்லை.

    இதைதொடர்ந்து அவர்கள் மணப்பெண் மாயமானது பற்றி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வந்த நிலையில் உறவினர்களும் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தனர்.

    மணப்பெண் மாயமானது குறித்து அதிர்ச்சி தகவல் கிடைத்ததும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். மகிழ்ச்சியாக காணப்பட்ட திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. உடனடியாக திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையில் திருமணம் நிறுத்தப்பட்டது பற்றிய தகவல் தெரியாத உறவினர்கள் பலர் இருவீட்டிற்கும் வந்தனர். அதன்பிறகே அவர்களுக்கு மணமகள் மாயம் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
    Next Story
    ×