search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
    X

    குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

    குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் குறைந்ததால் 5 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். #courtallamfalls
    தென்காசி:

    தென்மேற்கு பருவ மழையின் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் ஆரம்பமாகும். தொடர்ந்து சீசன் ஆகஸ்டு மாதம் இறுதி வரை ரம்மியமாக இருக்கும். சில ஆண்டுகள் செப்டம்பர் மாதம் வரை சீசன் நீடிப்பதுண்டு. இந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து சீசனை அனுபவிப்பார்கள்.

    இந்த ஆண்டு குற்றால சீசன் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிய தொடங்கினர். தொடர்ந்து சீசன் களைகட்டியது. தற்போது வரை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கேரளாவில் பெய்த கனமழையினால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குற்றாலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது.

    இந்நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் மழை குறைந்ததையடுத்து குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் குறைந்தது. இதனால் அருவிகளில் 5 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். நேற்று விடுமுறை நாளாக இருந்தும் குற்றாலத்துக்கு குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர். அவர்கள், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வர தொடங்கினர்.

    மெயினருவியில் தாராளமாக விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். இதே போல் ஐந்தருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஐந்தருவிக்கு அரசு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சீசன் இன்னும் 2 வாரங்கள் இருக்கும் என்பதால் சீசனை அனுபவிக்க மீண்டும் குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். #courtallamfalls

    Next Story
    ×