search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண் இன்று காலை பெருமளவில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்த காட்சி.
    X
    கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண் இன்று காலை பெருமளவில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்த காட்சி.

    கொள்ளிடம் பழைய பாலம் இடிந்து விழுந்தாலும் புதிய பாலத்திற்கு ஆபத்து இல்லை - கலெக்டர் தகவல்

    திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் பகுதி இடிந்து விழுந்தாலும் புதிய பாலத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார். #Kollidamriver
    திருச்சி:

    முக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. வெள்ளம் ஏற்படுத்திய மண் அரிப்பால் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18-வது தூண் உடைந்து ஆற்றுக்குள் மூழ்க தொடங்கியது. நள்ளிரவு பாலத்தின் தூண் மேலும் ஆற்றுக்குள் சரிந்தது.

    எந்த நேரத்திலும் பாலத் தின் இரும்பு பகுதி இடிந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் விழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசா மணி நள்ளிரவு 2 மணிக்கு கொள்ளிடம் பழைய பாலத்தை சென்று பார்வையிட்டார்.



    தொடர்ந்து அதிகாரிகளுடன் காவிரி, கொள்ளிட கரையோரம் உள்ள முக்கியமான இடங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார். இதற்கிடையே மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் மேலும் 50 ஆயிரம் கன அடி நீர் இன்று இரவு திறந்து விடப்படும் என கூறப்படுகிறது.

    அந்த நீர் முழுவதையும் முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை கொள்ளிடத்தில் மட்டும் 2 லட்சம் கனஅடி நீருக்கு மேலாக சீறிப்பாயும். அப்போது பழைய கொள்ளிடம் பாலம் மேலும் பாதிப்படையலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தலா 15 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுவினர் திருச்சிக்கு நேற்று வந்தனர். அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். திருச்சி, முசிறி, திருப்பராய்த்துறை உள்ளிட்ட சில இடங்களில் கரையோர பகுதி வீடுகள், குடிசைகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் வெளியேறி விட்டனர்.

    மேலும் 50 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படவுள்ளதால் கரையோர பகுதி மக்கள் என்ன ஆகும் என கவலையில் உள்ளனர்.

    இது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    திருச்சி மாவட்டத்தில் வெள்ள எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. இன்று 50 ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் கொள்ளிடத்தில் திறந்து விடப்படும்.

    திருச்சி மாவட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார வளர்ச்சி, அலுவலர்கள், போலீசார், மாநகராட்சி என அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளப்பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதுதவிர பேரிடர் மீட்புக் குழுவும் வந்துள்ளது. மின் மோட்டாருடன் உள்ள நவீன போட்டுகளுடன், 10-க்கும் மேற்பட்ட போட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு கீதா புரம், காக்காதோப்பு, பஞ்சக்கரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அதிகாரிகள் நிலைமையை கண்காணித்தனர். நான் நள்ளிரவில் கொள்ளிடம் பழைய பாலத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். இடிந்த தூண் பகுதி கூடுதலாக ஆற்றுக்குள் சரிந்துள்ளது.

    பழைய பாலம் பகுதி இடிந்து விழுந்தாலும் புதிய பாலத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 ஆயிரம் கனஅடி நீர் வரும் போது கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Kollidamriver


    Next Story
    ×