search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலப்பாளையத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் திடீர் மோதல்- மேஜை-நாற்காலிகள் உடைப்பு
    X

    மேலப்பாளையத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் திடீர் மோதல்- மேஜை-நாற்காலிகள் உடைப்பு

    மேலப்பாளையத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் கண்ணாடி ஜன்னல்களையும் கல்லால் உடைத்துவிட்டு கும்பல் தப்பியோடி விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் நகர கூட்டுறவு சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்கனவே வேட்புமனு தாக்கல் நடந்தது. அப்போது மேலப்பாளையத்தில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மேலப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்த அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் மனு தாக்கல் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மற்றொரு தரப்பினர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்த படியே தேர்தலை நடத்த வேண்டும் என கூறினர். இந்நிலையில் இன்று காலை கூட்டுறவு சங்க அதிகாரிகள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் உள்ளே நுழைந்து மேஜை, நாற்காலிகள், விளக்குகளை உடைத்தனர். மேலும் கண்ணாடி ஜன்னல்களையும் கல்லால் உடைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திறகு மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையொட்டி மேலப்பாளையம் நகர கூட்டுறவு சங்க தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், அவைத்தலைவர் ஜெகநாதன் என்ற கணேசன், துணை செயலாளர் எம்.சி.ராஜன், பகுதி செயலாளர்கள் ஹைதர்அலி, அசன்ஜாபர்அலி மற்றும் நிர்வாகிகள் வேண்டுமென்றே ஆளுங்கட்சியினர் பொருட்களை உடைத்துவிட்டு தேர்தலை ஒத்திவைத்துவிட்டனர். உடனடியாக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என கூறினர்.

    இதைதொடர்ந்து அ.தி.மு.க.பகுதி செயலாளர்கள் ஹயாத், கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் ஜெனி உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்து அ.ம.மு.க.வினர் வேண்டுமென்றே கலவரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இருதரப்பினரும் புகார் கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலப்பாளையத்தில் உள்ள மற்ற கூட்டுறவு சங்கங்களுக்கும், பாளையில் உள்ள கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள 32 கூட்டுறவு சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    தேர்தல்களை அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் பார்வையிட்டு வருகின்றனர். இன்று மாலை தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

    Next Story
    ×