search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை - பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
    X

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை - பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 124 அடியாக உள்ளது. #Papanasamdam
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்து வருகிறது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தினசரி மழை பெய்து வருகிறது.

    பாபநாசம் மலைப் பகுதியில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று காலை வரை பெய்த மழை அளவு 86 மில்லி மீட்டர் ஆகும். அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 805 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    தண்ணீர் அதிகளவில் வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 119 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 124 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை பகுதியில் இன்று காலை வரை 59 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.38 அடியாக இருந்தது. இன்று அது மேலும் 2 அடி உயர்ந்து 140.88 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 926 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 71.75 அடியாக உள்ளது.

    இதேபோல் கடனாநதி அணை 82.50 அடியாகவும், ராமநதி அணை 80 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 4 அடி அதிகரித்து 132.22 அடியாக உயர்ந்து நிரம்பி வழிகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70.21 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது விவசாயத்திற்காக 9 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்- 86, சேர்வலாறு-59, கொடு முடியாறு-55, கருப்பாநதி-43, அடவிநயினார்-35, கடனாநதி-33, குண்டாறு-20, தென்காசி-17, ராதாபுரம்-15, ஆய்க்குடி-10, செங்கோட்டை -9, ராமநதி-5, மணிமுத்தாறு-1.4 #Papanasamdam

    Next Story
    ×