search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் ‘ஆடிப்பூரம்‘ மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    8-ம் திருநாளான நேற்று ஆண்டாள் சூடிக் கொள்வதற்கான மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வந்தடைந்தன.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ரேவதி நட்சத்திரத்தின் போதும், மதுரை கள்ளழகருக்கு சித்ரா பவுர்ணமியின் போதும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மங்கலப் பொருட்கள் அனுப்பப்பட்டு அவை சாமிகளுக்கு சாத்தப்படும். மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வந்த மங்கலப் பொருட்கள் உற்சவருக்கு சாத்தப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன.

    9-ந் திருநாளான இன்று காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வருகிற 16-ந் தேதி ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிக்கு புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.

    ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆடிப்பூர விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×